இடைவேளை

தவிர்க்க இயலாத காரணங்களினால் அடுத்த சில வாரங்களுக்கு பதிவுகளை மேம்படுத்திட இயலாத நிலையில் இருக்கிறேன். அதே நேரத்தில் எனது முகநூல் குழுமத்தில் தகவல்கள் வழமையாக மேம்படுத்தப்படும்.இனி வரும் நாட்களில் எனது வர்த்தக குறிப்புகளை முகநூல் குழுமத்தில் பகிர உத்தேசித்திருக்கிறேன். முகநூல் குழும முகவரி.

 

https://www.facebook.com/panguvaniham

25, பெஃப்ரவரி 2014

நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்த 6191 நிலைகளைத் தொட்டு சந்தைகள் முடிவடைந்திருக்கின்றன அல்லது முடிவடையச் செய்யப் பட்டிருக்கிறது. FNO expiry வாரம் என்பதால் சந்தையில் எதுவும் சாத்தியமாகும். நாளின் துவக்கத்தில் நேற்றைய உயர் நிலை உடைபடுமாயின் சந்தை உயர்வுகள் தொடரும்….இல்லையேல் தேசிய நிஃப்டி 6158  நிலைகளுக்கு கீழிறங்கும் வாய்ப்புகளை எதிர்பார்க்கிறேன்.

தினவர்த்தகர்கள் இன்றைய சந்தையை 6158 க்கு மேல் கீழ் என அணுகலாம். மேல் நிலையில் 6237 தடை நிலையாகவும், கீழ் நிலையில் 6098 தாங்கு நிலையாகவும் இருக்கும். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

24, பெஃப்ரவரி 2014

மாதத்தின் கடைசி வாரம். FNO expiry வாரம். 

தற்போதைய நிலவரங்களின் அடிப்படையில் தேசிய நிஃப்டியில் 6118 முக்கியமான நிலையாக இருக்கும். இந்த நிலைகளுக்கு மேல், கீழ் என இந்த வார சந்தைகளை அணுகிடலாம்.பொதுவில் சந்தையில் நிலையற்ற தன்மையே மேலோங்கி இருக்கும். மேலும் பக்கவாட்டு நகர்வுகளே அதிகம் இருக்கும் என்பதால் சிறு வர்த்தகர்கள் உடனுக்குடன் லாபங்களை உறுதி செய்து கொள்வது நல்லது.

மேல் நிலையில் 6191 வலுவான தடை நிலையாக இருக்கும். இந்த நிலையில் சந்தைகள் பின்னடையும் வாய்ப்புகளை எதிர் பார்க்கிறேன். கீழ் நிலையில் 6066 தாங்கு நிலையாக இருக்கும். பொதுவில் சந்தைகள் இந்த நிலைகளின் ஊடே மேலும் கீழுமாய் நகரும்.

இந்த வாரத்தின் இறுதியில் GDP குறியீடுகள் வெளியாக இருப்பதால் அதன் தாக்கம் சந்தையில் எதிரொலிக்கும். கவனம் தேவை.மகா சிவராத்திரியை முன்னிட்டு வரும் வியாழனன்று சந்தைகளுக்கு விடுமுறை.

 

20, பெஃப்ரவரி 2014

தொடர்ந்து நான்காவது நாளாக சந்தைகள் உயர்வடைந்திருக்கின்றன. நேற்று நாளின் நெடுகே நமது தடை நிலையான 6144 நிலைகளின் ஊடே தேங்கியிருந்த சந்தைகள் நாளின் முடிவில் சட்டென உயர்வடைந்து  6152 நிலைகளில் முடிவடைந்திருக்கிறது. இந்த கடைசி நேர உயர்வு சிறு வர்த்தகர்களுக்கு விரிக்கப் பட்ட வலையாக இருக்கலாம்.

நான்கு நாள் உயர்வுக்குப் பின்னர் இன்றைய சந்தைகள் கணிசமாய் பின்னடையும் வாய்ப்புகளையே எதிர்பார்க்கிறேன்.

இன்றைய சந்தைகளைப் பொறுத்தவரையில் தேசிய நிஃப்டியில் 6190 முக்கியமான தடை நிலையாக இருக்கும். கீழ் நிலையில் 6135 தாங்கு நிலையாக இருக்கும். இந்த நிலைகளுக்குக் கீழ் சந்தைகள் நழுவினால் நாளின் நெடுகெ 6100 வரை கிழிறங்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

19, பெஃப்ரவரி 2014

 தொடர்ந்து மூன்றாவது நாளாக சந்தைகள் உயர்வடைந்திருக்கிறது. பொதுவில் எதிர்பார்த்த படியே நேற்றைய சந்தை நகர்வுகள் அமைந்திருந்தன. தேசிய நிஃப்டியின் நேற்றைய உயர் நிலையான 6141 வலுவான தடை நிலையாக இருக்கும். அடுத்த சில நாட்களுக்கு சந்தைகள் இந்த நிலையைச் சுற்றியே ஊடாடுமென எதிர்பார்க்கிறேன். தொடர்ந்து இரு தினங்கள் இந்த நிலைகளுக்கு மேல் சந்தைகள் முடிவடைந்தால் மட்டுமே அடுத்த கட்ட நகர்வுகளை எதிர்பார்க்கலாம்.

இன்று நாளின் துவக்கத்தில் 6100 நிலைகள் முக்கியமானதாய் இருக்கும். இந்த நிலைகளை சந்தைகள் எவ்வாறு கையாளுகின்றன என்பதைப் பொறுத்தே நாளின் நெடுகில் சந்தை நகர்வுகள் அமையும். மேல் நிலையில் 6144 தடை நிலையாகவும், கீழ் நிலையில் 6078 தாங்கு நிலையாக இருக்கும்.

18, பெஃப்ரவரி 2014

அத்யாவசிய ஆடம்பரப் பொருட்கள் சிலவற்றின் விலைகளைக் குறைத்ததைத் தவிர பெரிதாய் சொல்லிக் கொள்ள ஏதுமில்லாத இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தாக்கல் செய்திருக்கிறார். தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில் இதுபோன்ற வெகுசன ஈர்ப்பை முன்வைக்கும் ஒன்றைத்தான் எதிர்பார்க்க முடியும். 

எதிர்பார்த்தபடியே நிதிநிலை அறிக்கையின் அறிவிப்புகள் சந்தையில் பெரிதான சலசலப்பினை ஏற்படுத்தவில்லை. இரண்டாவது நாளாக சந்தைகள் நாளின் உயர் நிலைகளுக்கு அருகாமையில் முடிவடைந்திருக்கின்றன. நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்த தடை நிலையான 6066 க்கு மேலே தேசிய நிஃப்டி முடிவடைந்திருக்கிறது. இத்தகைய சூழலில் தேசிய நிஃப்டி அடுத்த இலக்கான 6130 வரை உயரும் வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை.

இன்றைய சந்தைகளைப் பொறுத்தவரையில் தேசிய நிஃப்டியில் 6066 முக்கிய நிலையாக இருக்கும். இந்த நிலைகளுக்கு மேல், கீழ் என சந்தைகளை அணுகிடலாம். கீழ் நிலையில் 6000 வலுவான தாங்கு நிலையாக இருக்கும். மேல் நிலையி 6096 தடை நிலையாக விளங்கும். 

 

17, பெஃப்ரவரி 2014

வெளியூர் பயணங்களின் காரணமாய் கடந்த வாரம் பதிவுகளை மேம்படுத்திட இயலவில்லை. எனினும் சந்தை நகர்வில் பெரிதான மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்து விடவில்லை. எதிர்பார்த்த படியே தேசிய நிஃப்டி 6000 நிலைகளையே சுற்றிக் கொண்டிருக்கின்றன.

தற்போதைய சூழலில் சந்தைகள் குறுகிய எல்லைகளில் சிக்கியிருப்பதாகவே தோன்றுகிறது. இன்று மத்திய அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கலாகிறது. பெரிதான கொள்கை முடிவுகள் எதுவும் அறிவிக்க வாய்ப்பில்லாத நிலையில் மத்திய நிதியமைச்சர் எத்தகைய அறிவிப்புகளை வெளியிடப் போகிறார் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். எனவே இன்றைய சந்தைகள் இந்த அறிவிப்புகளையொட்டியே நகரும்.

எது எப்படி இருந்தாலும் தற்போதைய அமைப்புகளின் படி தேசிய நிஃப்டியில் 6000 வலுவான தாங்கு நிலையாக இருக்கிறது. மேல் நிலையில் 6066 தடை நிலையாக இருக்கும். இந்த நிலைகளுக்கு மேல், கீழ் என இன்றைய சந்தைகளை அணுகிடலாம்.

இன்றைய சந்தையின் முடிவில் தேசிய நிஃப்டி 6066 நிலைகளுக்கு மேல் முடிவடைந்தால் வாரத்தின் நெடுகில் தேசிய நிஃப்டி 6140 வரை உயரும் வாய்ப்புகளை எதிர்பார்க்கிறேன்.